பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 209 ரன்கள் குவித்துள்ளது.

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆரம்பமே அதிரடியில் தான் தொடங்குவோம் என்பது போல தொடக்க ஆட்டக்காரர்கள் விளையாடினார்கள் என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் மாற்றி மாற்றி அதிரடி காட்டிக்கொண்டு இருந்தார்கள். 10 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் விளையாடி வந்த குஜராத் அணியில் முதல் விக்கெட்டாக சாய் சுதர்சன் அதிரடி காட்டி 39 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் குஜராத் 93 ரன்கள் எடுத்திருந்தது.
ஒரு விக்கெட் இழந்தாலும் நம்மளுடைய அதிரடி நிற்காது என ராஜஸ்தானுக்கு பயத்தை காட்டும் வகையில் சுப்மன் கில் அதிரடி காட்டிக்கொண்டு இருந்தார். அவர் ஒரு பக்கம் அதிரடி காட்ட நீங்க மட்டும் தான் அதிரடி காட்டுவீர்களா? நானும் காட்டுவேன் என்பது போல ஜாஸ் பட்லரும் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று தான் சொல்லவேண்டும்.
உதாரணமாக 14-வது ஓவரை எதிர்கொண்ட பட்லர் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி என விளாசி அசத்தினார். இதன் காரணமாக 15 ஓவர்களில் குஜராத் அணி 149 ரன்கள் எடுத்துவிட்டது. அப்படி இருந்தும் அதிரடி நிற்காமல் ஒரே அதிரடியில் தான் ஆடுவோம் என்பது போல விளையாடி கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் தான் சதம் அடிக்கும் நோக்குடன் சென்ற கில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
ராஜஸ்தான் அணி ஒரு புயலை சமாளித்தாலும் மற்றொரு புயலான பட்லர் புயல் இருந்த காரணத்தால் பெரிய டார்கெட் குஜராத் வைக்கும் என எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தது போலவே சிக்ஸ்ர் பவுண்டரி என பறக்கவிட்டு பட்லர் அரைசதம் விளாசினார். இவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணி 209 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்குகிறது. மேலும், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மஹீஷ் தீக்ஷனா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.