#DelhivsHyderabad: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 134 ரன்களில் சுருட்டிய டெல்லி!

Sunrisers Hyderabad set a 135-run target for Delhi Capitals to win the 33rd league match of the IPL.

ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ஐபிஎல் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியும், 8வது இடத்தில உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. துபாய் மைதானத்தின் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களான அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சா களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் அன்ரிச் நார்ட்ஜே பந்தில் டக் அவுட்டானார். விருத்திமான் சா 17 பந்துகளில் வெறும் 18 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இவர்களை தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மிகவும் சுமாராக விளையாடி 26 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, மணீஷ் பாண்டே 17 ரன்களில் ரபடா பந்தில் பெவிலியன் திரும்பினார். இதனால் ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையாமல் மிகவும் தடுமாறியது.

டெல்லி பவுலர்களை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி பவுலர்களை பொறுத்தளவில் ககிசோ ரபாடா 3, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது. டெல்லி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் என்பது குறிப்பித்தக்கது.