“விலகுறதும்… திரும்ப வர்றதும் புதுசில்ல” – பாகிஸ்தானை கடுமையாக சாடிய கவாஸ்கர்!

பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுடனான் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் இதுகுறித்து பேசியுள்ளார்.

sunil gavaskar

கொழும்பு :பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் மோதலை புறக்கணிப்பதாக பிசிபி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் அரசு இந்த முடிவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல், அரசியல் காரணங்கள், வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்துள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பில் புறக்கணிப்பிற்கான துல்லியமான காரணங்கள் விரிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஐசிசி விதிகளின்படி பாகிஸ்தான் அணிக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.இந்த அறிவிப்புக்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டுமே விளையாட மாட்டோம் என்பது கிரிக்கெட்டின் நேர்மை, சமத்துவம், ஒழுங்கு ஆகியவற்றுக்கு எதிரானது என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இத்தகைய முடிவு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பாகிஸ்தான் அணி இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஐசிசி வலியுறுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இந்த முடிவை கடுமையாக சாடியுள்ளனர். முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “இதில் என்ன புதுமை இருக்கிறது? பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு பெறுவது, பின்னர் ரசிகர்கள் கோரிக்கை என்று மீண்டும் வருவது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான பெரிய போட்டியில் இருந்து விலகுவதற்கு சரியான காரணம் இல்லையென்றால் ஐசிசி நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார். முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “இந்த முடிவு ஐசிசியின் வருவாயில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

தண்டனை நடவடிக்கை எடுக்க உலக அமைப்புக்கு உரிமை உண்டு” என்று தெரிவித்தார்.இந்த புறக்கணிப்பு அறிவிப்பு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை மோதலை ரத்தாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி விதிகளின்படி பாகிஸ்தான் அணிக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் என்றும், இது முழு தொடரையும் பாதிக்கலாம் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசியின் கண்டனம் மற்றும் எச்சரிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் அரசு தனது முடிவை மாற்றுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இந்த முடிவு மாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.