டெல்லி :முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பயிற்சி முறை குறித்து கடுமையான விமர்சனம் வெளியிட்டுள்ளார். அர்ஜுன் அடிப்படையில் சிறந்த பேட்ஸ்மேன் என்றும், அவரது பந்துவீச்சுக்கு அதிக கவனம் செலுத்துவது தவறு என்றும் யோக்ராஜ் கூறினார். “அர்ஜுன் தனது தந்தை சச்சினைப் போல ஆடுகிறார். ஆனால் பயிற்சியாளர்கள் அவரது பேட்டிங் திறமையை சரியாகப் பயன்படுத்தவில்லை” என்று அவர் வேதனை தெரிவித்தார்.
யோக்ராஜ் சிங் ரவிஷ் பிஷ்ட்டின் யூடியூப் சேனலில் பேசியபோது, அர்ஜுன் தனது அகாடமியில் கேம்ப் வந்தபோது நடந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “அர்ஜுன் எனது அகாடமிக்கு வந்தபோது, அவரைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள். ஒரு நாள் பந்து அடிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பின்னர் அவரிடம் பேட் அணியச் சொன்னேன். ஆனால் அவர்கள் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று கூறினார்” என்று யோக்ராஜ் நினைவுகூர்ந்தார்.
அர்ஜுன் தனது அகாடமியில் ஒரு வாரம் பேட்டிங் பயிற்சி செய்த பிறகு, ரஞ்சி டிராஃபி டெபியூவில் சதம் அடித்ததை யோக்ராஜ் சுட்டிக்காட்டினார். “நான் அவரது பயிற்சியாளரிடம் ஏன் பேட்டிங் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கேட்டேன். ஆனால் சாக்கு சொன்னார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது அர்ஜுனை ஓப்பனராக ஆட வைக்கச் சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை” என்று யோக்ராஜ் விமர்சித்தார்.
அர்ஜுன் டெண்டுல்கர் 2022 டிசம்பரில் கோவாவுக்காக ரஞ்சி டிராஃபி டெபியூ செய்து சதம் அடித்து சச்சினைப் போல சாதனை படைத்தார். சச்சின் 1988-ல் குஜராத்துக்கு எதிராக ரஞ்சி டெபியூவில் சதம் அடித்திருந்தார். யோக்ராஜ் சிங்கின் இந்தக் கருத்து அர்ஜுனின் பேட்டிங் திறமை குறித்து மீண்டும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.அர்ஜுன் தற்போது பந்துவீச்சில் கவனம் செலுத்தினாலும், அவரது பேட்டிங் திறமை உலகத் தரம் வாய்ந்தது என்று யோக்ராஜ் வலியுறுத்தினார். இந்த விமர்சனம் இந்திய அணி தேர்வு மற்றும் அர்ஜுனின் எதிர்காலம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ரசிகர்கள் அர்ஜுனின் பேட்டிங்கை மீண்டும் பார்க்க ஆவல் கொண்டுள்ளனர்.
