“நான் என்னை நிரூபிக்க வேண்டியதில்லை” – டென்ஷனான சுப்மன் கில்

IPL-ல் கடந்த 4 சீசன்களைப் பார்த்தால் நான்தான் அதிக ரன்களைக் குவித்துள்ளேன் என கில் தெரிவித்துள்ளார்.

Hero Image

குஜராத் : ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், “எனக்கு நிரூபிக்க எதுவும் இல்லை” என்று தெளிவாகக் கூறியுள்ளார். சமீப காலமாக இந்திய அணியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் குறித்து பேசிய அவர், தனிப்பட்ட மைல்கற்களை விட அணியின் வெற்றியே தனது முதன்மை இலக்கு என்று வலியுறுத்தினார்.கடந்த ஒரு வருடத்தில் இந்திய டி20 அணியில் சுப்மன் கில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தார். அவர் ஒரு கட்டத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார், பின்னர் மீண்டும் அழைக்கப்பட்டார்.


ஆசியக் கோப்பைக்கு துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026-க்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. இத்தகைய சூழலிலும் கில் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருப்பதாகத் தெரிவித்தார்.ஐபிஎல் தொடக்கத்துக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுப்மன் கில், “கடந்த மூன்று அல்லது நான்கு சீசன்களைப் பார்த்தால், ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தவர் நான்தான்.


எனவே இந்த சீசனில் என்னுடைய திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த அணியில் நான்கு வருடங்கள் விளையாடியுள்ளேன். அணியாகவும், தனிப்பட்ட பேட்ஸ்மேனாகவும் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம்” என்றார்.


மேலும் அவர் கூறுகையில், “எனக்கு யாருக்கும் என் மதிப்பை நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. கடந்த நான்கு வருடங்களாக நான் செய்து வந்ததைத்தான் தொடர்ந்து செய்ய வேண்டும். அணியாக நாங்கள் நிலையான செயல்பாட்டைத் தொடர வேண்டும். அப்படி தொடர்ந்தால் விரைவில் மீண்டும் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து, தனது தனிப்பட்ட இலக்குகள் குறித்து பேசிய கில், “தற்போது எனது முக்கிய இலக்கு ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான். அதன் பிறகு அணிக்குள் வேறு சில போட்டிகள் இருக்கும். அப்போது எனது இலக்குகள் மாறும். இப்படித்தான் எனது இலக்குகளை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.கடந்த சீசன்களில் ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவரான சுப்மன் கில், தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார். ஐபிஎல் 2026 சீசனில் அவரது தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

“நான் என்னை நிரூபிக்க வேண்டியதில்லை” – டென்ஷனான சுப்மன் கில்