RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்! 

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக பெங்களூரு அணி அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் RCB அணி ஐபிஎல் 2025 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும்.

RCB - IPL 2025

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தற்போதைய புள்ளிப் பட்டியலில், டெல்லி கேபிட்டல்ஸ் (+1.257) 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (+1.015) 3-வது இடத்திலும் உள்ளன. முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி (+1.413) உள்ளது. இந்தப் போட்டியின் முடிவு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக அமையும்.

டெல்லி அணி :

டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல்-ல் இதுவரை தோல்வியடையாத அணியாக திகழ்கிறது. அக்சர் படேல் தலைமையிலான இந்த அணி, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக அபார வெற்றிகளைப் பதிவு செய்து, 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் டாப் 2வில் உள்ளது. குஜராத் அணி 5இல் 4 வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி 4வது போட்டியான இன்றும் வெற்றி பெற்றால் 4க்கு 4 என எளிதாக முதலிடத்திற்கு வந்துவிடும்.

பெங்களூரு அணி :

RCB அணி ரஜத் படிதார் தலைமையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சமீபத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றி, CSK அணியுடன் வெற்றி என நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால், சொந்த மண்ணில் இன்னும் வெற்றி பெறாதது அவர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. இதே சின்னசாமி மைதானத்தில் குஜராத் அணியுடன் மோதிய போட்டியில் மட்டும் RCB தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடக்கத்து.

முதலிடத்திற்கு முன்னேறுமா RCB?

இன்றைய போட்டியில் RCB வெற்றி பெற்று, அதிக ரன் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்தால், அவர்கள் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு அவர்கள் பேட்டிங்கில் ஆக்ரோஷமாகவும், பந்துவீச்சில் துல்லியமாகவும் செயல்பட வேண்டும். ஆனால், டெல்லி அணி வெற்றி பெற்றால், அவர்கள் தங்கள் தோல்வியடையாத ஓட்டத்தைத் தொடர்ந்து, முதலிடத்தை எளிதில் உறுதி செய்வார்கள்.

அதிக ரன் வித்தியாசத்தில் அல்லது குறைவான ஓவர்களில் வெற்றி என்பது RCBக்கு பலம் வாய்ந்த டெல்லி அணியிடம் இருந்து கிடைப்பது கடினம். RCB வெற்றியே பெற்றாலும் அது இறுதி நேரத்தில் போராடி பெற்ற வெற்றியாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் 20 ஓவர் ஐபிஎல் போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் விராட் கோலி , கேப்டன் ரஜத் படிதார் , ஜிதேஷ் சர்மா ஆகியோரும், பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா,  ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் பந்துவீச்சில் முக்கிய வீரர்களாக உள்ளனர். டெல்லி அணியை பொறுத்தவரை கே.எல். ராகுல் , கேப்டன் அக்சர் படேல் (ஆல்ரவுண்டர்), குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் முக்கிய வீரர்களாக உள்ளனர்.

மைதானம் :

RCB-ஐ தவிர அனைத்து அணிகளுக்கும் தங்கள் சொந்த மைதானம் நேர்மறையான ரிசல்ட்டை தான் தரும். ஆனால், பெங்களூரு அணிக்கு சின்னசாமி மைதானம் எதிர்மறையான ரிசல்ட்டை தான் அதிகம் தந்துள்ளது. சிறிய மைதானமான சின்னசாமி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக அமைகிறது. இதனையும் தாண்டி RCB இன்று வெற்றி பெரும் முனைப்பில் விளையாடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்