சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என்பது போல பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வழக்கத்தை விட இந்த முறை சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் தான் சொதப்பியது என்று சொல்லவேண்டும்.
சென்னை அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக சாம் கரண் 88 ரன்கள் எடுத்திருந்தார். அதைப்போல, பந்துவீச்சை பொறுத்தவையில் பஞ்சாப் அணியை சேர்ந்த யுஸ்வேந்திர சாஹல் 19-வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார். சென்னை 190 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்ததாக 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.
தொடக்கத்தில் அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அவருக்கு அடுத்ததாக பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் சென்னை பந்துவீச்சாளர்களுக்கு அதிரடியை காண்பித்தார்கள் என்று சொல்லலாம். இருவரும் ஆட்டமிழக்காமல் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொண்டு சிக்ஸர் பவுண்டரி என விளாசினார்கள்.
அந்த சமயம் தான் சென்னை அணிக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் அரை சதம் விளாசிய பிறகு 54 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் நான் அதிரடி தான் காட்டுவேன் என்பது போல அதிரடியாக விளையாடினார் என்று சொல்லலாம்.
அவருடன் இணைந்து ஷஷாங்க் சிங்கும் அதிரடியாக விளையாடிய நிலையில் பஞ்சாப் அணி வேற்றி வாய்ப்பு உறுதியாக தெரிந்தது. 4 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டு சிக்ஸர் அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றியை பஞ்சாப் பக்கம் கொண்டு வந்தார்.
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணியை அதனுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்தியது. சென்னை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மதீஷா பத்திரனா 2 விக்கெட்களையும், நூர் அஹமட், ரவீந்திர ஜடேஜா, கலீல் அஹமட் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.