”அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி” – மத்திய அரசின் புதிய உத்தரவு.!
நிதி அமைச்சகம் புழுங்கல் அரிசி மற்றும் குறிப்பிட்ட அரைக்கப்பட்ட அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.

டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஏற்றுமதி வரி இன்று (மே 1) அமலுக்கு வருகிறது.
புவிசார் குறியீடு பெற்ற புழுங்கல் அரிசி, புவிசார் குறியீடு பெறாத புழுங்கல் அரிசி என இரண்டிற்கும் வரி விதிக்கப்படுகிறது. மேலும், இதில் அரை அரைக்கப்பட்ட அல்லது முழுமையாக அரைக்கப்பட்ட அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட அல்லது மெருகூட்டப்பட்ட அரிசி ஆகியவை அடங்கும்.
உயர் மட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து இது முடிவு செய்யப்பட்டது. உள்நாட்டில் அரிசி விலையை நிலைப்படுத்தவும், தேவைக்கேற்ப இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் வரி விதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் முந்தைய கட்டுப்பாடுகளை தளர்த்திய சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் அரிசி விற்பனை, அரிசி பதுக்கல் ஆகியவற்றை தடுக்க மத்திய நிதியமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.