வாட்டி வதைக்க காத்திருக்கும் வெயில்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கோடை மழை அதிகமாக பெய்யும் என வானிலை மையம் கூறினாலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று (மே 1) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பாக இருக்கும் கோடை வெயிலை விட வெப்பநிலை உயரும் என்றும் தெரிவித்துள்ளது.
நாளை (மே 2) முதல் வெப்பநிலை அளவு 3 டிகிரி செல்ஸியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இம்மாதம் வெயிலின் தாக்கம், கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதே நேரம், இந்த மாதத்தில் பெய்ய உள்ள கோடை மழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரி – காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில தினங்களில் கோடைமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.