ரிலீஸ் பண்ணுங்க...ரூ.23.75 கோடிக்கு என்ன பண்ணாரு? வெங்கடேஷ் ஐயரை வறுத்தெடுத்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

மும்பை இண்டியன்ஸ் அணியைப் பொறுத்தவரை, தீபக் சாஹரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Venkatesh Iyer krish srikanth

டெல்லி :முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டனுமான கிரிஸ் ஸ்ரீகாந்த், ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்னதாக மூன்று முக்கிய வீரர்கள் பற்றி தனது யூடியூப் சேனலில் தெளிவாகக் கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் ஐயரை “வர்த்தகம் செய்ய முடியாத வீரர்” என்று கடுமையாக விமர்சித்த அவர், கடந்த இரு சீசன்களாக அய்யர் சொதப்பியதால் எந்த அணியும் அவரை டிரேடு செய்ய மாட்டார்கள் என்றார்.

2025 மெகா ஏலத்தில் ரூ.23.75 கோடி கொடுத்து வாங்கியும் 11 போட்டிகளில் வெறும் 20.28 சராசரி மட்டுமே எடுத்ததால், KKR அவரை விடுவித்துவிட்டு ஏலத்தில் ரூ.3 கோடிக்கு எளிதாக வாங்கிவிடலாம் என்று ஸ்ரீகாந்த் கூறினார். ஐய்யரின் சிறந்த இடம் ஓப்பனிங் என்பதை மறந்து மிடில் ஆர்டரில் ஆட வைத்ததே தோல்விக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மும்பை இண்டியன்ஸ் அணியைப் பொறுத்தவரை, தீபக் சாஹரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் வலியுறுத்தினார். ரூ.9.25 கோடி கொடுத்து வாங்கிய சாஹர் 2025 சீசனில் 11 விக்கெட் மட்டுமே எடுத்து 9.17 எகானமியுடன் ஏமாற்றம் அளித்தார். ஓடவும் முடியாமல், ஃபீல்டிங் செய்யாமல், பாதி நேரம் காயம் சொல்லி வெளியேறுவதால் அவரை ஸ்குவாடில் வைத்திருக்க எந்தப் பயனும் இல்லை என்று கடுமையாகத் தெரிவித்தார். MI ஏற்கெனவே செட் ஆன அணி என்பதால் சாஹரை விடுவிப்பதே சிறந்தது என்று அவர் அறிவுறுத்தினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை, ஹென்ரிச் கிளாசனை எக்காரணம் கொண்டும் விடுவிக்கக் கூடாது என்று ஸ்ரீகாந்த் எச்சரித்தார். முந்தைய சீசனில் பெரிய இன்னிங்ஸ் ஆடிய கிளாசன், கடந்த சீசனில் பேட்டிங் பொசிஷனை அதிகம் மாற்றியதால் தடுமாறினார். 5-வது இடம், 16 ஓவர்களுக்குப் பிறகு ஃபினிஷர் எனக் குழப்பியதே தவறு என்று கூறிய அவர், கிளாசனை 3-வது ஓவரிலிருந்து நம்பர் 3-ல் ஆட வைத்தால் தானாக ரன் குவிப்பார் என்றார். விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாக உள்ளதால், விடுவித்தால் மீண்டும் வாங்குவது கடினமாகிவிடும் என்று எச்சரித்தார்.

ஸ்ரீகாந்தின் இந்தத் தெளிவான பகுப்பாய்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஐபிஎல் 2026 ஏலத்தில் KKR, MI, SRH அணிகள் இவரது ஆலோசனைகளைப் பின்பற்றுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.