எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்… ருதுராஜ் கெய்க்வாட்!

Ruturaj Gaikwad

ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார்.

கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய நடப்பு சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று, லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் அனைத்து அணிகளும் விளையாடி வருகிறது. அந்தவகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 210 ரன்களை அடித்தது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி (60 பந்துகளில் 108) சதம் அடித்தார். இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவரது அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அவர் 63 பந்தில் 124 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். ஏற்கனவே லக்னோவில் தோல்வியை சந்தித்த சென்னை அணி, சென்னையிலும் தோல்வி சந்தித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்த சீனில் சென்னையில் வெற்றி பெற்ற முதல் அணி லக்னோ அணிதான். இந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இது ஒரு சிறந்த போட்டியாக அமைந்தது.

போட்டியின் கடைசி நேரத்தில் லக்னோ அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் 13-14 ஓவர்கள் வரை போட்டியை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் மார்கஸ் ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடி போட்டியை அவர்கள் பக்கம் திருப்பினார். அதேபோல் மறுபக்கம் பனியும் அதிகமாக இருந்தது. இதனால் எங்கள் ஸ்பின்னர்கள் பந்துவீச முடியாமல் போனது.

எங்கள் திட்டப்படி பந்துவீச்சாளர்கள் செயல்பட முடியவில்லை. ஒருவேளை பனி இல்லாமல் இருந்திருந்தால் போட்டியை இன்னும் கடைசி வரை நாங்கள் எடுத்துச் சென்றிருப்போம். இருப்பினும், இதுபோன்ற சூழல் போட்டியின் ஒரு அங்கமாகும். அதை கட்டுப்படுத்த முடியாது. பவர்பிளேயில் இரண்டாவது விக்கெட்டை இழந்ததால் ஜடேஜா முன்கூட்டியே 4வது இடத்தில் பேட்டிங் செய்தார்.

பவர் பிளேவுக்கு பிறகு ஒரு விக்கெட் விழுந்தால் துபே பேட்டிங் செய்ய வரவேண்டும் என்பது எங்களுடைய திட்டமாகும். அதற்காக களத்தில் இருப்பவர்கள் விக்கெட்டை இழக்க வேண்டும் என வற்புறுத்த முடியாது. நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும்போதே பனி இருப்பதை பார்த்தோம். எனவே, லக்னோ வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ததற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்