டெல்லி :நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காயம் காரணமாக விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், விஜய் ஹசாரே டிராபியில் காயமடைந்த திலக் வர்மா முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி இத்தொடரை 2026 டி20 உலகக்கோப்பைக்கான முக்கிய பயிற்சியாக கருதி வருகிறது. எனவே, உலகக்கோப்பைக்கு திட்டமிடப்பட்டுள்ள முக்கிய வீரர்களே இத்தொடரிலும் பங்கேற்க உள்ளனர். ஆனால், காயங்கள் காரணமாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் விலகியுள்ளது அணியின் சமநிலையை சற்று பாதித்துள்ளது.வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பில் காயமடைந்தார்.
இதனால் ஒருநாள் தொடரிலும் இருந்து விலகிய அவர், டி20 தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரவி பிஷ்னோய் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார்.திலக் வர்மா விஜய் ஹசாரே டிராபியில் காயமடைந்ததால், முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு மாற்றாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக 2023ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டி20 போட்டியில் விளையாடியிருந்தார். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.இந்த மாற்றங்கள் தொடரின் போக்கை பாதிக்கலாம் என்றாலும், இந்திய அணி இன்னும் வலுவானதாகவே கருதப்படுகிறது. ரவி பிஷ்னோயின் ஸ்பின் திறனும், ஷ்ரேயாஸ் ஐயரின் மிடில் ஆர்டர் பேட்டிங் திறனும் அணிக்கு பலம் சேர்க்கும். தொடர் ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. ரசிகர்கள் இந்த மாற்றங்களுடன் அணியின் செயல்பாட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
