டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியில் முக்கிய மாற்றம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை புதிய கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரும் ஜூன் 26ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும், அதைத் தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், துணை கேப்டனாக இருந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக திலக் வர்மா நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அணியின் நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய தலைமையை உருவாக்க தேர்வாளர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு குறித்து சூர்யகுமார் யாதவுக்கு நேரடியாக தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை நடைபெற உள்ள பிசிசிஐ உயர்மட்ட இணையவழி கூட்டத்தில் இந்த முடிவுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தேர்வுக் குழுவினர் இறுதி ஆலோசனையை நடத்தவுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ நிர்வாகமும் தேர்வுக் குழுவும் அந்த யோசனையை ஏற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 2026 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியிருந்தாலும், 14 போட்டிகளில் 498 ரன்கள் குவித்தார். ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் 168.81 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மறுபுறம், சூர்யகுமார் யாதவின் சமீபத்திய ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஐபிஎல் 2026 தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி மிகவும் மோசமாக சார்ந்துள்ள காரணத்தால் அவருடைய தேர்வு குறித்து தேர்வாளர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வெல்ல வழிநடத்திய ரஜத் படிதாரின் பெயரும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டாலும், அவரை இந்திய அணியின் கேப்டனாக நியமிப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பிசிசிஐ கூட்டத்திற்குப் பிறகு வெளியாகும் அறிவிப்பே இந்திய டி20 அணியின் புதிய தலைமையை உறுதி செய்யும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
