சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், தலைமைச் செயலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தலைமைச் செயலகத்திற்கு முன்பு அவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவை காவல்துறையினர் உடனடியாகத் தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். எனினும், கைதுக்குப் பின்னர் அவர் முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதற்காகப் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாணவர்களை அடிக்கக் கூடாது; மாணவர்களை அடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது" என்று தனது எதிர்ப்பையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தினார்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரு முன்னணி கலைஞரை போலீசார் கைது செய்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாகியுள்ளது.இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், "டெல்லி சிஜெபி (CJP) போராட்டங்களுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கிப் போராடலாம் என நினைக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, அறிவின் கைது ஒரு கவலைக்குரிய செய்தியை தவெக அரசு தந்துள்ளது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
