#T20 World Cup 2022: தனியாக போராடிய லோர்கன் டக்கர், அயர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.!
டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 63 ரன்களும், ஸ்டோனிஸ் 35 ரன்களும் குவித்தனர். அயர்லாந்து அணி தரப்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்களும், ஜோசுவா லிட்டில் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் விக்கெட்களை இழந்து வந்தனர். முடிவில் அயர்லாந்து அணி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறி கொடுத்தது.
அயர்லாந்து அணியில் லோர்கன் டக்கர், சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு இறுதி வரை போராடினார். அவர் 71 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்சேல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.