ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே பந்துக்கு பின்னாடி ஓட வைக்கிற உலகத்தோட மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா, 'பிஃபா உலகக்கோப்பை 2026' இன்று (ஜூன் 11) அமெரிக்கா, மெக்சிகோ, கனடானு மூணு நாடுகள்ல பயங்கர மாஸா தொடங்கவிருக்கிறது.
2026 பிபா உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டி இன்று நள்ளிரவு (ஜூன் 12 அதிகாலை 12:30 மணி, இந்திய நேரப்படி) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் Mexico மற்றும் South Africa அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மெக்சிகோ சிட்டியில் உள்ள Estadio Azteca மைதானத்தில் நடைபெறுகிறது. உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனம் இந்தப் போட்டியின் மீது திரும்பியுள்ளது .
இந்நிலையில், மைதானத்தில் அதிரப்போற ரசிகர்களோட மாஸ் சத்தத்துக்கு நடுவில் கால்பந்து உலகத்தோட வரலாற்றுப் பக்கங்கள்ளில் மறைந்து கிடைக்கும் 5 தாறுமாறான மற்றும் சுவாரசியமான சீக்ரெட் விபரங்கள் பற்றி பார்ப்போம்
உலகைக் கலக்கிய 'பிக்கிள்ஸ்' நாய்
கடந்த 1966-ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இங்கிலாந்தில் வைக்கப்பட்டிருந்த பிஃபாவின் அசல் உலகக்கோப்பைத் தொப்பி (ஜூல்ஸ் ரிமட் டிராபி) பொதுக் கண்காட்சியின் போது திடீரென திருடப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த கால்பந்து உலகமும், காவல்துறையும் கடும் அதிர்ச்சியில் உறைந்தது.
உலகமே இந்தத் திருட்டைப் பற்றிப் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த வேளையில், 'பிக்கிள்ஸ்' (Pickles) என்ற ஒரு வளர்ப்பு நாய், லண்டனில் உள்ள ஒரு தோட்டத்தின் புதர்களுக்கு இடையே பேப்பரில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த அசல் உலகக்கோப்பையை மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்தது. இதன் மூலம் அந்த நாய் உலகப் புகழ்பெற்றது.
வெறும் காலோடு விளையாட தடை
கடந்த 1950-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கு இந்தியக் கால்பந்து அணி அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றிருந்தது. ஆனால், அன்றைய காலகட்ட விதிமுறைகளின்படி வீரர்கள் அனைவரும் கட்டாயம் பூட்ஸ் (கால்பந்து காலணி) அணிந்துதான் விளையாட வேண்டும் என பிஃபா கறாராகக் கூறிவிட்டது.
நம் நாட்டு வீரர்களுக்கு வெறும் காலோடு (பூட்ஸ் இல்லாமல்) விளையாடியே பழக்கம் இருந்ததால், பூட்ஸ் அணிந்து விளையாட மறுத்து, இறுதி நேரத்தில் இந்திய அணி அந்த உலகக்கோப்பைத் தொடரிலிருந்தே முழுமையாகப் பின்வாங்கியது.
11-வது விநாடியில் அசாத்திய கோல்
உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக அதிவேகமாக கோல் அடித்த வரலாற்று உலக சாதனை துருக்கி நாட்டின் நட்சத்திர வீரர் 'ஹக்கான் சுகுர்' (Hakan Sukur) என்பவரது பெயரில் உள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில், தென்கொரியா அணிக்கு எதிரான ஆட்டம் தொடங்கிய 11-வது விநாடியிலேயே, எதிரணி சுதாரிப்பதற்குள் இவர் மின்னல் வேகத்தில் கோல் அடித்து ஒட்டுமொத்த உலகையும் ஸ்தம்பிக்க வைத்தார்.
ஒற்றைக் கையுடன் உலகக்கோப்பையை வென்ற மாவீரன்
உருகுவே நாட்டில் கடந்த 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றின் முதலாவது பிஃபா உலகக்கோப்பைத் தொடரை வென்ற உருகுவே அணியில் 'ஹெக்டர் காஸ்ட்ரோ' (Hector Castro) என்ற அசாத்தியமான வீரர் இடம் பெற்றிருந்தார். தனது சிறு வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார வாள் விபத்தில் இவரது ஒரு கை முற்றிலும் துண்டிக்கப்பட்டு நீக்கப்பட்டிருந்தது. உடலின் ஒரு கை இல்லாதபோதும், கடுமையான உழைப்பால் அணியில் இடம் பிடித்து, அந்த முதல் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தனது நாட்டிற்காக அதிரடி கோல் அடித்து உருகுவே சாம்பியன் பட்டம் வெல்ல மிக முக்கியக் காரணமாக அமைந்தார்.
ஒரே போட்டியில் 16 மஞ்சள் கார்டுகள்
கடந்த 2006-ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் நடைபெற்ற போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம், கால்பந்து வரலாற்றிலேயே மிக மோசமான வன்முறை ஆட்டமாக மாறியது. வீரர்கள் மைதானத்திலேயே ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதால், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய நடுவர் வாலண்டின் இவனோவ், அந்த ஒரே போட்டியில் சாதனை அளவாக 16 மஞ்சள் கார்டுகளையும் (Yellow Cards), 4 சிவப்பு கார்டுகளையும் (Red Cards) காட்டி வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இந்த ஆட்டம் இன்றும் கால்பந்து வரலாற்றில் "நியூரம்பெர்க் போர்" (Battle of Nuremberg) என்று அழைக்கப்படுகிறது.
உலகக்கோப்பையின் பிற முக்கிய வரலாற்றுச் சாதனைகள்:
ஒரே போட்டியில் அதிக கோல்கள்: ரகசிய சாதனை படைத்த ரஷ்யாவின் 'ஒலெக் சாலென்கோ' (Oleg Salenko), கேமரூன் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் (ரஷ்யா 6-1 கேமரூன்) 15, 18, 44, 72 மற்றும் 75-வது நிமிடங்களில் என மொத்தம் 5 கோல்களை அடித்து சாதனை படைத்தார்.
ஒரு உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல்கள்: பிரான்ஸ் நாட்டின் 'ஜஸ்ட் ஃபான்டைன்' (Just Fontaine) என்பவர், கடந்த 1958 ஸ்வீடன் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய வெறும் 6 போட்டிகளில் மட்டும் அசாத்தியமாக 13 கோல்களை அடித்து, ஒரே தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை இன்றுவரை தன்வசம் வைத்துள்ளார்.
