FIFA 2026: கோடிகளை அள்ளும் 5 கால்பந்து நாயகர்கள்! யார் சம்பளம் அதிகம்?

ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இரு ஜாம்பவான்களும் விளையாட்டு உலகில் 'பில்லியனர்' அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.

Hero Image

உலகக் கால்பந்து வரலாற்றில் 96 ஆண்டுகளில் இல்லாத பல புதிய சாதனைகளுடனும், அதிரடி மாற்றங்களுடனும் FIFA உலகக்கோப்பை 2026 இன்று தொடங்குகிறது. முதன்முறையாக இந்தத் தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அதுமட்டுமன்றி, வரலாற்றிலேயே முதல் தடவையாக அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து 16 நகரங்களில் இந்த உலகக்கோப்பைத் தொடரை நடத்துகின்றன.

இந்நிலையில், இந்த அசாத்தியமான தொடரில் களம் காணும், உலகிலேயே மிக அதிக வருமானம் ஈட்டும் டாப் 5 கால்பந்து நட்சத்திரங்களின் விவரங்கள் பற்றிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ – $300 மில்லியன்

கால்பந்து உலகில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலேயே மிக அதிக வருமானம் ஈட்டும் வீரராக 41 வயதான போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். கடந்த 12 மாதங்களில் மட்டும் இவர் 300 மில்லியன் டாலர் (சுமார் ரூ,2,500 கோடி) வருவாய் ஈட்டியுள்ளார். இதில் மைதானத்தில் விளையாடுவதன் மூலம் $235 மில்லியனும், விளம்பரங்கள் மூலம் $65 மில்லியனும் கிடைத்துள்ளது.

அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விளையாட்டு உலகில் 'பில்லியனர்' அந்தஸ்தைப் பெற்ற 4 வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். தனது 6-வது உலகக்கோப்பையில் களம் காணும் ரொனால்டோ, தனது நீண்ட நாள் கனவான உலகக்கோப்பைக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார்.

லியோனல் மெஸ்ஸி

நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வழிநடத்தும் 38 வயது லியோனல் மெஸ்ஸியும் அண்மையில் ரூ. 10,520 கோடி சொத்து மதிப்புடன் 'பில்லியனர்' கிளப்பில் இணைந்துள்ளார். ரொனால்டோவை போலவே மெஸ்ஸியும் தனது 6-வது உலகக்கோப்பையைத் தொடரில் விளையாடி சாதனை படைக்கவுள்ளார். கடந்த ஓராண்டில் இவரது வருமானம் ரூ. 1,340 கோடி ஆகும். இதில் மைதானத்தில் விளையாடுவதன் மூலம் ரூ. 670 கோடியும் மற்றும் விளம்பரங்கள் மூலம் ரூ. 670 கோடியும் கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் மெஸ்ஸி இன்னும் 4 கோல்கள் அடித்தால், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை முறியடிப்பார்.

கிலியன் எம்பாப்பே

ரியல் மாட்ரிட் கிளப் அணியின் நட்சத்திரமும், 27 வயதே ஆன பிரான்ஸ் அணியின் முன்னணி வீரருமான கிலியன் எம்பாப்பே ரூ. 909 கோடி வருமானத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதில் மைதானத்தில் விளையாடுவதன் மூலம் ரூ. 670 கோடியும் மற்றும் விளம்பரங்கள் மூலம் ரூ. 239 கோடியும் கிடைத்துள்ளது. ஏற்கனவே 19 வயதில் பிரான்ஸ் அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த எம்பாப்பே, மெஸ்ஸியை விட 3 உலகக்கோப்பைகள் குறைவாக விளையாடியிருந்தாலும், உலகக்கோப்பை கோல் பட்டியலில் மெஸ்ஸியை விட ஒரே ஒரு கோல் மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எர்லிங் ஹாலாண்ட்

மான்செஸ்டர் சிட்டி அணியின் 25 வயது இளம் அதிரடி ஆட்டக்காரரான எர்லிங் ஹாலாண்ட் ரூ. 765 கோடி வருமானத்துடன் நான்காவது இடத்தில் உள்ளார். இதில் மைதானத்தில் விளையாடுவதன் மூலம் ரூ. 574 கோடியும் மற்றும் விளம்பரங்கள் மூலம் ரூ. 191 கோடியும் கிடைத்துள்ளது. 1998-ஆம் ஆண்டிற்குப் பிறகு நார்வே நாடு தகுதி பெற்றுள்ள முதல் உலகக்கோப்பைத் தொடர் இது என்பதால், ஒட்டுமொத்த நார்வே நாட்டின் எதிர்பார்ப்பும் ஹாலாண்ட் மீதே உள்ளது. "என் மீது அதிக அழுத்தம் உள்ளது, ஆனால் அந்த அழுத்தத்தை நான் விரும்புகிறேன்" என ஹாலாண்ட் மாஸ் காட்டியுள்ளார்.

வினிசியஸ் ஜூனியர்

பிரேசில் அணியின் 25 வயது இளம் விங்கரான வினிசியஸ் ஜூனியர் ரூ. 574 கோடி வருமானத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதில் மைதானத்தில் விளையாடுவதன் மூலம் ரூ. 382 கோடியும் மற்றும் விளம்பரங்கள் மூலம் ரூ. 192 கோடியும் கிடைத்துள்ளது. 24 ஆண்டுகால உலகக்கோப்பை வறட்சியை முடிக்க பிரேசில் அணி போராடி வரும் வேளையில், வினிசியஸ் ஜூனியர் நைக் நிறுவனத்துடன் இணைந்து 'ஃபோர்ட்நைட்' கேமிங் ஸ்கின் கன்டென்ட்டிலும் இடம்பெற்று இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறார்.

மேலும், 2026 பிபா உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டி இன்று நள்ளிரவு (ஜூன் 12 அதிகாலை 12:30 மணி, இந்திய நேரப்படி) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் Mexico மற்றும் South Africa அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மெக்சிகோ சிட்டியில் உள்ள Estadio Azteca மைதானத்தில் நடைபெறுகிறது. உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனம் இந்தப் போட்டியின் மீது திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.