லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்க அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தியது. சொந்த ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கிய அமெரிக்க அணி, முதல் போட்டியிலேயே முழு மூன்று புள்ளிகளையும் கைப்பற்றியுள்ளது.
70,492 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்க விசில் ஒலித்தது முதல் அமெரிக்க வீரர்கள் பந்தின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருந்தனர். கிறிஸ்டியன் புலிசிக் உருவாக்கிய தாக்குதல்கள் பராகுவே பாதுகாப்பு வரிசைக்கு தொடர்ந்து சவாலாக அமைந்தன.
அதன் பலனாக முதல் பாதியிலேயே அமெரிக்கா மூன்று முறை வலை குலுக்கியது. பலோகன் இரண்டு கோல்கள் அடிக்க, மற்றொரு கோல் பராகுவே வீரரின் சொந்த கோலாக பதிவானது. இடைவேளைக்கு செல்லும்போது அமெரிக்கா 3-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் பராகுவே சற்று ஆக்ரோஷமாக விளையாடியது. ஒரு கோலை அடித்து கணக்கைத் தொடங்கிய அந்த அணி, ஆட்டத்திற்குள் மீண்டும் வர முயற்சி செய்தது. ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு வரிசை மேலும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஆட்டம் முடிவை நெருங்கியபோது ஜியோ ரெய்னா அடித்த கோல், அமெரிக்க ரசிகர்களின் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கியது. அதன்பிறகு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டி 4-1 என்ற கணக்கில் நிறைவடைந்தது.
கடந்த கத்தார் உலகக்கோப்பையில் நான்கு போட்டிகளில் சேர்த்து மூன்று கோல்கள் மட்டுமே அடித்திருந்த அமெரிக்கா, இம்முறை முதல் ஆட்டத்திலேயே நான்கு கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் உலகக்கோப்பையை நடத்தும் அமெரிக்க அணிக்கு இந்த வெற்றி உற்சாகமான தொடக்கத்தை வழங்கியுள்ளது. மறுபுறம், 16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை மேடைக்கு திரும்பிய பராகுவே, தோல்வியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
