அதிமுகவால் பாஜகவின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் செயல்பட முடியாது. – பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேச்சு.
அதிமுகவுக்கும் , பாஜகவுக்கு இடையே மேலிடத்தில் எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறி வந்தாலும், அவ்வப்போது கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் அதிமுக – பாஜக கூட்டணி பற்றி தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
அண்ணாமலை கருத்து :
சமீபத்தில் அண்ணாமலை, தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன் என கூறியதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. அதன் பிறகு, அண்ணாமலை கட்சி மேலிட நிர்வாகிகளை டெல்லியில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பாஜக :
அதன் பிறகு பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும் எனவும், ஆனால், தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என நினைக்கிறன் எனவும் அவர் கூறினார்.
சரியான பாதையில் அண்ணாமலை :
அண்ணாமலை கூறிய கருத்துக்கள் தொடர்பாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறுகையில்,’ தமிழக அரசியலில் அண்ணாமலை சரியான பாதையில் செயல்பட்டு வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று கூறுவது பாஜகவிற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. என குறிப்பிட்டார்.
அதிமுகவுக்கு பாஜக தேவை :
மேலும், அண்ணாமலையின் அரசியல் சரியாக உள்ளது. அண்ணாமலை இதுபோன்ற கருத்துக்களை கூறினால் மட்டுமே அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால், அதிமுகவால் பாஜகவின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் செயல்பட முடியாது. தமிழ்நாட்டில் பாஜக 1990ஆம் ஆண்டை போல் வலுபெற்று வருகிறது.