சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!
சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள் என்று தெலுங்கானாவின் நம்பள்ளியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்த போது முறைகேடு நடந்ததாக சிபிஐ விசாரித்து வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டியும் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரெட்டிக்குச் சொந்தமான ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம் (OMC) சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சுரங்க ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
அதன்படி, நான்கு பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்பொழுது, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் ஜனார்தன ரெட்டி.
கர்நாடகா – ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் சுரங்க குத்தகை எல்லைக் குறிகளை சேதப்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக சுரங்கம் நடத்தியதாகவும் ரெட்டி மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது .