தவெகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை...தவெக நிர்வாகி நிர்மல் குமார் பேட்டி

சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகத்துடன் தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் சந்திப்பு நடத்தினார்.

Hero Image

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் முயற்சியில், சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகத்தை தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிர்மல் குமார் கூறியதாவது:“சட்டப்படி single largest party-க்கு கண்டிப்பாக ஆளுநர் அழைப்பு கொடுக்க வேண்டும். இன்று தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே ஆளுநர் எங்களை அழைக்க வேண்டும். அதற்கான கடிதத்தை நேற்று கொடுத்தோம். இன்று காலையிலும் மீண்டும் சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். நேரம் இருக்கிறது. ஆளுநர் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார் என்று நம்புகிறோம். ஒரு நாள் காத்திருந்து பார்ப்போம்.

மேலும் அவர் கூறுகையில், “எங்கள் தலைவர் ஏற்கெனவே முதல் மாநாட்டிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறார் – அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு. மக்கள் வாக்களித்த அனைத்துக் கட்சிகளும் தங்கள் கொள்கைகளை நிறைவேற்ற ஆட்சியில் பங்கேற்க வேண்டும். அதுதான் எங்கள் நிலைப்பாடு. எந்த நெருக்கடியும் இல்லை” என்றார்.

தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது எனவே, அதை சேர்த்து 113 தொகுதி ஆன நிலையில், ஆளுநர் தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. தவெக தரப்பில், மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.இந்தச் சந்திப்பு மற்றும் நிர்மல் குமாரின் பேட்டி, தமிழக அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

தவெகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை...தவெக நிர்வாகி நிர்மல் குமார் பேட்டி