கேரளாவில் தொடரும் கனமழை: ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை.!
கேரளாவில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்: ஜூலை 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கேரளாவில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. ஜூலை 17 முதல் 21 வரை மாநிலத்தில் மிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
அதேபோல, மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோரப்புழா (கொல்லிக்கல் நிலையம்) மற்றும் குட்டியாடி (குட்டியாடி நிலையம்) ஆகிய ஆறுகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் ஆறுகளுக்குள் நுழையவோ அல்லது கடக்கவோ கூடாது என்றும், ஆற்றங்கரைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.