பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகாரில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவுள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

Free electricity - Nitish Kumar

பீகார் :இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு யாருமே எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, பீகாரில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவுள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஆகஸ்ட் 1, 2025 முதல், பீகாரில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அதாவது 0 முதல் 125 யூனிட் வரையிலான மின்சார நுகர்வுக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. 125 யூனிட்டுகளுக்கு மேல் நுகர்வு இருந்தால், கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இது குறித்த தகவலை முதல்வர் நிதிஷ் அவர்களே எக்ஸ் பதிவில், ”ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மலிவான விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். ஆகஸ்ட் 1, 2025 முதல், அதாவது ஜூலை மாதக் கட்டணத்திலிருந்து, மாநிலத்தின் அனைத்து வீட்டு நுகர்வோரும் 125 யூனிட் வரை மின்சாரத்திற்கு எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்று இப்போது நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இது மாநிலத்தில் மொத்தம் 1 கோடியே 67 லட்சம் குடும்பங்களுக்கு பயனளிக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த அனைத்து வீட்டு நுகர்வோரிடமிருந்தும் சம்மதம் பெற்று, அவர்களின் வீடுகளின் கூரைகளில் அல்லது அருகிலுள்ள பொது இடத்தில் சூரிய மின் நிலையங்களை நிறுவுவதன் மூலம் நன்மைகள் வழங்கப்படும் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ரூ.900 முதல் 950 வரை சேமிக்கும். இதனால் 1.67 கோடி குடும்பங்கள் பயனடையும். இந்த அறிவிப்பு, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

பல மாநிலங்களில், அரசியல் கட்சிகள் இலவச மின்சாரத்தின் அடிப்படையில் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, நிதிஷ் அரசாங்கம் ஏராளமான அரசு திட்டங்களைத் தொடங்கியுள்ளது அதன் ஒரு பகுதியாக, இளைஞர்களுக்கான ‘முக்கியமந்திரி பிரதிக்ய யோஜனா’ மற்றும் தொழிலதிபர்களுக்கான ‘வியாவசாயி விபத்து மரண மானியத் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளன.