சென்னை : தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. சரியாக காலை 10 மணிக்குச் சபாநாயகர் வருகைக்குப் பிறகு தொடங்கிய இக்கூட்டத்தொடரில், 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு அதிரடியான மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை அவர் வரிசையாக அறிவித்துள்ளார்.
மாணவர்களின் உயர் கல்வி மற்றும் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10 கோடி ஆரம்ப மூலதனத்துடன் 'TNSHIC' எனப்படும் சிறப்பு நோக்கு நிறுவனம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக, 'TN-SUDAR' திட்டத்தின் கீழ் ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் கட்டப்படவுள்ளன.
இதில் சுமார் 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்கப்பட இருப்பதுடன், அரசு-தனியார் கூட்டாண்மை (PPP-DBFOT) முறையில் செயல்படுத்தப்படும் இப்பணிகளுக்குத் தேவையான 20 சதவீத கட்டுமான மானியமாக ரூ.640 கோடியை அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் குளிரூட்டப்பட்ட டிஜிட்டல் கற்றல் மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், நவீன சமையலறைகள் மற்றும் தானியங்கி ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட பல உலகத்தரம் வாய்ந்த உயர்தர வசதிகள் மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, இளைஞர்களின் வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்காக 'வெற்றி திறன் பயிற்சித் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் நவீன திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும், அரசு மற்றும் முன்னணித் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு நேரடியாகப் பணியிடப் பயிற்சியும், பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குடும்பத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு எவரும் இல்லாத ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் இந்தத் திட்டத்திற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
