சென்னை : தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதற்காக காலை 9 மணி முதலே சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு வருகை தரத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, சரியாக காலை 9:30 மணியளவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
இக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கைக் கோப்புகளுடன் சட்டப்பேரவைக்கு வந்த நிதி அமைச்சர் மரிய வில்சன், தொடக்கக் நிகழ்வாக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சரியாக காலை 10 மணிக்குச் சபாநாயகர் வருகைக்குப் பின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்த முக்கியமான கூட்டத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்து உரையாற்றினார்.
அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில், பெண்களின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்குடன், வரும் 2026ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
