தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? – ஆதவ் அர்ஜுனா கொடுத்த விளக்கம்.!
திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை., அதிமுகவை எதிர்க்காததற்கு காரணம் என்னவென்று ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20, 2025) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மூன்று கட்சிகளுடன் த.வெ.க. எந்தவொரு கூட்டணியும் வைக்காது என தெளிவாக அறிவித்தார்.
செய்தியாளர்களிடைம் பேசிய ஆதவ் அர்ஜுனா,”வக்பு சட்டம் தொடர்பாக தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வக்பு மசோதாவிற்கு சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தவெக வரவேற்றது. கேரள அரசு எப்படி இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டதோ, அதேபோல் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடினால் வழக்கு பலம் பெறும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அரசியல் எதிரி தி.மு.க.வுடனும், கொள்கை எதிரி பா.ஜ.க.வுடனும் கூட்டணி இல்லை. பா.ஜ.க. உடன் இருப்பதால் அ.தி.மு.க.வுடனும் த.வெ.க. கூட்டணி அமைக்காது. விஜய்யின் நிலைப்பாட்டை தான் பொதுவெளியில் நாங்கள் தெரிவிக்கிறோம்.
எதிர்கட்சியான அதிமுகவை நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, பல தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? தவெகவின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதே எங்களின் நிலைபாடு” என்று கூறினார்.