‘வக்பு சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பெரும் பாதிப்பு’… ஆதவ் அர்ஜுனா காட்டம்.!
வக்பு சட்டத்திற்கு எதிரான சட்ட போராட்டத்தில் திமுக அரசு இணைய வேண்டுமென தவெக ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம் பத்திரிகையலாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, வக்பு சட்டம் தொடர்பாக பேசினார், முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு குறித்தும் பேசியிருந்தார்.
இது தொடர்பாக பேசிய ஆதவ் அர்ஜுனா. ”வக்பு சட்டம் தொடர்பாக தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வக்பு மசோதாவிற்கு சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தவெக வரவேற்றது. சச்சார் குழு அறிக்கை அடிப்படையில் இஸ்லாமியர்கள் கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் இஸ்லாமியர்கள் பின் தங்கி உள்ளனர். இந்திய சராசரியைவிட இஸ்லாமியர்களின் கல்வித்தகுதி குறைவு. 2005இல் ராஜேந்திர சர்தார் கமிட்டி இஸ்லாமியரது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து அறிக்கை வெளியிட்டது.
வக்ஃபு வாரிய சொத்து மசோதாவுக்கு எதிராக தவெக உண்மையாக போராடி வரும் நிலையில், சிறுபான்மை இன காவலர் என சொல்லும் திமுக எதற்காக போராடவில்லை. வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும்.
அண்ணன் திருமாவளவன், ஜனநாயக போராட்டத்தில் பங்கெடுத்து தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், இந்த விவகாரத்தை வாக்கு வங்கியாக அணுக கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.