நீலகிரியில் வெளுத்து வாங்க போகும் மழை.! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!
நீலகிரி மாவட்டத்துக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு கர்நாடக உட்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இன்றை தினம் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை நிலவரம்:
இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.