நாளை இந்த 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை மையம் தகவல்!
திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழகத்தில் கோடை வெயில் தணிந்து தற்போது சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக வானிலை ஆய்வு மையம் வானிலை தொடர்பான தகவலை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே, இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருந்தது.
அதைப்போல, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து நாளை (மே 27) 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதைப்போல, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.