மும்பையை துவம்சம் செய்த ஜோஷ் இங்கிலிஸ்…பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!
மும்பைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஜெய்ப்பூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகளை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளை அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது.
போட்டியில் முதலில் டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அதிரடியுடன் தடுமாறி விளையாடியது என்று சொல்லலாம். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது என்று கூறலாம். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 13ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் கூட பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ்இருவரும் மும்பை பந்துவீச்சாளர்கள் பந்துகளை சிக்ஸர் பவுண்டரி என விளாசினார்கள்.
இவர்கள் இருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணி வெற்றிப்பாதையை நோக்கி சென்றது என்று சொல்லலாம். நல்ல ரன் ரேட்டுடன் அணி வெற்றிப்பாதைக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் சிக்ஸர் விளாச முயன்று பிரியான்ஷ் ஆர்யா 62 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் பஞ்சாப் சரியான வெற்றிப்பாதையில் இருந்த காரணத்தால் பெரிய அளவில் அழுத்தம் ஏற்படவில்லை.
அவர் ஆட்டமிழந்த பிறகு களத்திற்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடினார். இறுதியாக ஜோஷ் இங்கிலிஸ் (73)அதிரடி ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர்2 , ஜஸ்பிரித் பும்ரா1 விக்கெட்களை வீழ்த்தினார்கள்