அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?
டேவிட் மில்லர், முகமது ஷமி உட்பட மொத்தம் 7 வீரர்களை அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்பு அணி நிர்வாகங்கள் விடுவிக்கமுடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம். அதைப்போலவே ஒரு சில வீரர்கள் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் அவர்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. எனவே, அந்த வீரர்களை எடுத்த அணி நிர்வாகங்கள் அடுத்த சீசன் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அப்படி இந்த சீசன் சரியாக விளையாடாத அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஒரு 7 வீரர்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் விடுவிக்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அந்த வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ரிஷப் பண்ட்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஐபிஎல் வரலாற்றிலே இதுவரை இல்லாத அளவுக்கு எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் தான்.இவரை லக்னோ அணி ரூ.27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது மட்டுமின்றி கேப்டனாகவும் வாய்ப்பு கொடுத்தது. கேப்டனாக அவர் சரியாக செயல்பட்டாலும் கூட பேட்டிங்கில் மிகவும் சொதப்பினார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த சீசனில் 12 போட்டிகள் விளையாடிய அவர் மொத்தமாகவே 151 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, இந்த அளவுக்கு அவர் மோசமாக விளையாடியிருப்பதன் காரணமாக அடுத்த சீசனில் அவரை அணி விடுவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
வெங்கடேஷ் ஐயர்
கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை இந்த முறை பிரமாண்ட விலையான ரூ.23.75 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்த நிலையில், அந்த விலைக்கு எடுத்த அளவுக்கு அவர் விளையாடினார் என்று கேட்டால் நிச்சயமாகவே இல்லை. மிகவும் சொதப்பலான ஆட்டத்தை தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். 11 போட்டிகள் நடப்பாண்டில் விளையாடிய அவர் மொத்தமாகவே 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடுவாரா என்பது சந்தேகம் தான்.
முகமது ஷமி
2023-ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக விளையாடிய முகமது ஷமி 28 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதன்பிறகு 2024-ஆம் ஆண்டு அவர் விளையாடாத நிலையில் அடுத்ததாக இந்த சீசன் அவரை குஜராத் விடுவித்தது. எனவே, ஹைதராபாத் அணி ஸ்கெட்ச் செய்து 10 கோடி ரூபாய் கொடுத்து அவரை தங்களுடைய அணிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், இவரும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. 9 போட்டிகள் விளையாடிய இவர் மொத்தமாகவே 6 விக்கெட்களை தான் வீழ்த்தி இருந்தார். எனவே, அவரை அடுத்த சீசன் தக்கவைக்க ஹைதராபாத் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
டேவிட் மில்லர்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்ட மில்லர், இந்த சீசனில் மிகவும் ஏமாற்றமளித்தார். 11 போட்டிகளில் 153 ரன்கள் மட்டுமே எடுத்த இவர், 127 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடிக்கவோ, இன்னிங்ஸை நிலைநிறுத்தவோ முடியவில்லை. இளம் வீரர்களின் எழுச்சி மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களுக்கான போட்டி காரணமாக, மில்லரின் மோசமான ஃபார்மும், உயர் விலையும் அவரை விடுவிக்கப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது.
ஜேக் ஃப்ரேசர்-மெக்ர்க்
2024ல் தனது அதிரடி ஆட்டத்தால் பரபரப்பை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஃப்ரேசர்-மெக்ர்க், டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.9 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால், இந்த சீசனில் 6 போட்டிகளில் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே, அணிக்கு பயனளிக்கும் வகையில் அவரால் இந்த சீசனில் செயல்படவில்லை என்பதால் அடுத்த சீசன் அவரை தக்க வைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என கூறப்படுகிறது.
க்ளென் மேக்ஸ்வெல்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் மூன்றாவது முறையாக இணைந்த மேக்ஸ்வெல், இந்த சீசனில் மிகவும் ஏமாற்றினார். 7 போட்டிகளில் 48 ரன்களும், 4 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்த இவர், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், காயம் காரணமாக ஐபிஎல்-லிருந்து விலகினார். இந்த சூழலில் பஞ்சாப் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும், மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு இல்லை. வயது மற்றும் தொடர்ந்து குறையும் ஃபார்ம் காரணமாக, பஞ்சாப் அவரை விடுவிக்கலாம்.
அஸ்வின்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பிய அஷ்வின், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், 9 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து, 9.12 என்ற மோசமான எகானமி ரேட்டுடன் பந்து வீசினார். ரூ9.75 கோடி விலையில், இளம் சுழற்பந்து வீச்சாளர்களை விட அவரது பங்களிப்பு குறைவாக இருந்தது. எனவே, பாதி போட்டியில் அவர் விளையாடவில்லை. இந்த சூழலில் அவரும் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாட வாய்ப்புகள் குறைவு தான் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.