INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

இந்தியா டெஸ்ட் தொடரில் பின் தங்கியிருக்கும் நிலையில் பும்ரா போன்ற ஒரு வீரர் இரண்டாவது போட்டியில் விளையாடவேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் தெரிவித்துள்ளார்.

Jasprit Bumrah Mark Butcher

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வு எடுக்கலாம் என்ற தகவலுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

விஸ்டன் கிரிக்கெட் வீக்லி பாட்காஸ்டில் பேசிய புட்சர், இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், அணியின் தேவைகளும் தொடரின் சூழலும் தனிப்பட்ட விருப்பங்களை விட முக்கியமானவை என்று கூறினார். “பும்ரா இந்த டெஸ்டில் ஆடியே ஆக வேண்டும். ஹெடிங்லி தோல்விக்குப் பின் ஆறு நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. பணிச்சுமை காரணமாக தானே அவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? ஏற்கனவே அவருக்கு முதல் போட்டி முடிந்த பிறகு சில நாட்கள் ஓய்வு கிடைத்துவிட்டது. எனவே, இந்திய  1-0 என பின்தங்கியுள்ள நிலையில், அவர் ஆட வேண்டும்,” என்று புட்சர் வலியுறுத்தினார்.

முதல் டெஸ்டில் இந்தியாவின் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக பும்ரா திகழ்ந்தார், முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். இருப்பினும், இந்திய அணி மேலாண்மை, பும்ராவின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு, ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடுவார் என முடிவு செய்துள்ளது. புட்சர், பும்ரா லார்ட்ஸ் மைதானத்தில் (மூன்றாவது டெஸ்ட்) ஆட விரும்பினாலும், அணியின் தேவை மற்றும் தொடரின் முக்கியத்துவம் கருதி எட்ஜ்பாஸ்டனில் ஆட வேண்டும் என்று வாதிட்டார்.

“லார்ட்ஸில் ஆட வேண்டும் என்பது பும்ராவின் விருப்பமாக இருக்கலாம், ஆனால் அணியின் தேவைகள் அதை விட முக்கியமானவை,” என்று அவர் கூறினார். இந்திய அணி ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து வெற்றிகரமாக விரட்டி, 1-0 என முன்னிலை பெற்றது. பும்ராவின் பந்து வீச்சு முதல் இன்னிங்ஸில் பிரகாசித்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விக்கெட் எடுக்கவில்லை. இதனால், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அவரது பங்கேற்பு இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது என புட்சர் உள்ளிட்ட பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை, 8 போட்டிகளில் 7ல் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், பும்ராவை ஓய்வு கொடுக்கும் முடிவு இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கலாம் என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி, “பும்ரா ஆடினால் நல்லது, இது மிக முக்கியமான டெஸ்ட் போட்டி,” என்று கூறி, அவரது பங்கேற்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்