7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!
பும்ரா ஆடினால் அணிக்கு பெரிய பலம் கிடைக்கும் எனவும் ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தேர்வு முடிவு குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் (எட்ஜ்பாஸ்டன், ஜூலை 2, 2025) உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படவில்லை.
முன்னதாகவே, அவருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. எனவே, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பும்ரா போன்ற வீரர் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை என்றால் அணி தோல்வியடைந்தால் அதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடும் என எச்சரிந்திருந்தார்கள். இருப்பினும் வெளியான தகவலை போலவே அவர் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை அவருக்கு ஓய்வு தான் அளிக்கப்பட்டது.
இது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயமாகவும் அமைந்துள்ளது. அப்படி தான் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நீங்கள் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளரை வைத்திருக்கிறீர்கள். ஆனால், 7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் அவருக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை என்பதை நம்பவே முடியவில்லை. நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்!” என்று சாஸ்திரி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
முதல் டெஸ்டில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்கவில்லை. இருப்பினும், அவரது திறமையும் அனுபவமும் எப்போது வேண்டுமானாலும் எதிரணியை கட்டுப்படுத்த முடியும் எனவே, அவர் 2-வது போட்டியில் விளையாடியிருக்கவேண்டும் என்பதை சாஸ்திரி வலியுறுத்தினார். மேலும் தொடர்ந்து பேசிய சாஸ்திரி “ஏழு நாட்கள் ஓய்வு இருக்கும்போது, பும்ராவை ஏன் விளையாட வைக்கவில்லை? இது அணியின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்காத முடிவு,” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் தொடர்ந்து பேசுகையில், “இது ஒரு முக்கியமான டெஸ்ட். பும்ரா ஆடினால் அணிக்கு பெரிய பலம் கிடைக்கும்,” என்று கூறினார். இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பும்ராவின் உடல் தகுதி மற்றும் நீண்டகால திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும், சாஸ்திரியின் விமர்சனம், அணியின் உத்தி மற்றும் தேர்வு முடிவுகள் மீது புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.