ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

இது குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு சந்தேகம் இருக்கு... ஆனா இல்ல என ராமதாஸ் பெயரை கூறாமல் பதிலை சொன்னதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

PMK Ramadoss

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக வெடித்துள்ளது. இந்த சூழலில்,  திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது மேலும் பேசுபொருளாக வெடித்துள்ளது.

இது தொடர்பாக விருத்தாச்சலத்தில் ஜூலை 11 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “என் வீட்டில், நான் உட்காரும் நாற்காலிக்கு அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த, அதிநவீன ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தது.

இதை இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் துப்பறியும் ஏஜென்சி மூலம் கண்டுபிடித்தோம்,” என்றார். தைலாபுரம் இல்லத்தில் இந்தக் கருவி குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆய்வு அறிக்கை வந்தவுடன் சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். “யார் மீது சந்தேகம் இருக்கிறது?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ராமதாஸ், “சந்தேகம் இருக்கு… ஆனா இல்ல…” என்று பதிலளித்தார், ஆனால் குறிப்பாக யாரையும் குற்றஞ்சாட்டவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக, பாமக செய்தித் தொடர்பாளர் கே. பாலு, “தைலாபுரத்தில் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழு அமைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். எந்த நோக்கத்திற்காக இந்தக் கருவி பொருத்தப்பட்டது என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாமக தொண்டர்களுக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை,” என்று வலியுறுத்தினார்.

மேலும், இதற்கிடையில், பாமகவின் 37-வது ஆண்டு நிறைவை ஒட்டி, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ராமதாஸ், “பாமகவின் எதிர்காலமும் நான்தான், நிகழ்காலமும் நான்தான். அரசியல் எதிர்காலம் குறித்து எந்த ஐயமும் தொண்டர்களுக்கு தேவையில்லை. எப்போதும் போல உங்களுடன் நான் நிற்கிறேன். வயதானாலும் சிங்கத்தின் கால்கள் பழுதடையாது, அதன் சீற்றமும் குறையாது. பாமகவின் கனவை நிறைவேற்ற எனக்குள் புது ரத்தம் பாயத் தொடங்கியுள்ளது,” என்று உறுதியாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்