ஆலப்புழா சென்ற அச்சுதானந்தன் உடல்.., இறுதி அஞ்சலிக்கு வழிநெடுக மக்கள்.!
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் உடல், திருவனந்தபுரத்தில் இருந்து அவரது சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவையொட்டி, கேரளாவில் பல இடங்களில் இரங்கல் கூட்டங்கள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள ஏகேஜி சென்டர் மற்றும் தர்பார் ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், இன்று திருவனந்தபுரத்தில் இருந்து அவரது சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்த வழிநெடுக மக்கள் பெருமளவில் திரண்டதால் முதல் 30 கிலோமீட்டரைக் கடக்கவே 8 மணிநேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. இப்பொழுது, ஆலப்புழாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலம் இன்று மாலை ஆலப்புழாவில் தொடங்கி, முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. கேரள மாநில அரசு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இறுதிச் சடங்குகள் இன்று மாலை ஆலப்புழாவில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளன. இதனிடையே, அச்சுதானந்தனின் விருப்பப்படி, அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஆலப்புழா மருத்துவக் கல்லூரிக்கு உடல் ஒப்படைக்கப்படலாம்.