“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!
தமிழகத்தில் ராஜ ராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமான சிலை அமைக்கப்படும் என்று கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார். மேலும், தேசிய சாகித்ய அகாடமியால் தொகுக்கப்பட்ட திருவாசகத்தின் பதிப்பையும் வெளியிட்டார்.
பின்னர் மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்டமான சிலைகள் அமைக்கப்படும்” என அறிவித்துள்ளார்.
தொடர்ந்து சோழர்கள் பெருமை குறித்து பேசுகையில், ”புதிய இந்தியாவிற்கான பழமையான வழிகாட்டி சோழ சாம்ராஜ்ஜியம். தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனிதமான செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது எனக்கு பெருமை. புதிய இந்தியாவிற்கான பழமையான வழிகாட்டியாக சோழ சாம்ராஜ்ஜியம் உள்ளது.
சோழர்கள் ஆட்சியில் நாடு வேகமாக முன்னேறியது. உள்ளூர் நிர்வாக அமைப்பை உருவாக்கியவர்கள் சோழர்கள். ராஜ ராஜ சோழன் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழன் அதனை விரிவுபடுத்தினார்.
நடராஜரின் சொரூபம், நமது தத்துவம், அறிவியல் வேர்களின் அடையாளமாகும்.சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் வரலாற்றின் பொற்காலமாக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்” என்றார்.