சென்னை : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது " பழனிக்கு வந்துதான் பக்தர்கள் மொட்டை போடுவார்கள், ஆனால் பழனிக்கே மொட்டை போட்டது தவெக ஆட்சி. கோயில் நிலத்தை இன்னொருவருக்குத் தாரை வார்த்த இந்த அரசு, எப்படித் தங்களைத் தூய்மையான அரசு என்று சொல்லிக்கொள்ள முடியும்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் " இந்த முறைகேடான நிலப்பதிவை ரத்து செய்தது நீதிமன்றமே தவிர, தவெக அரசு அல்ல. அரசு தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை," என அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தவர்களை இரவோடு இரவாகக் கைது செய்த காவல்துறை, நிலத்தை விற்றவர்களையும், வாங்கியவர்களையும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?" என்று அவர் காட்டமாகக் கேட்டுள்ளார்.
அது மட்டுமின்றி, நிலப் பதிவின் போது முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டிய பரந்தாமன், பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சட்ட வல்லுநர் கருத்து ஏன் பெறப்படவில்லை? : தீர்ப்பு வந்த பிறகு, அரசு வழக்கறிஞர் (Government Pleader) அல்லது மாவட்டப் பதிவாளரிடம் (District Registrar) ஏன் கருத்து கேட்கப்படவில்லை?
அவசரகாலப் பதிவு: அந்தப் பதிவைச் செய்த உதவிப் பதிவாளர் (Sub-Registrar) ஏன் திடீரென விடுப்பில் சென்றார்? அவர் ஏன் இன்னும் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை?
அமைச்சர்களின் மௌனம் மற்றும் தற்காப்பு: அமைச்சர்கள் ஏன் இந்த விவகாரத்தில் உண்மையைச் சொல்லாமல், அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்? "அறியாமை காரணமாகச் செய்துவிட்டோம்" என்று அவர்கள் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என அவர் சாடினார்.
தற்போது இந்த விவகாரம் சிபிசிஐடி (CBCID) வசம் உள்ள நிலையில், அதன் போக்கைக் கவனித்து வருவதாகக் கூறிய பரந்தாமன், "விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றால், திமுக நிச்சயம் நீதிமன்றத்தை நாடும். தவெக அமைச்சர்கள் நாகரிகமாகப் பேச வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, மக்கள் முன் உண்மையைச் சொல்ல வேண்டும். திருடனைத் தப்பிக்க வைக்கும் செயல்களைச் செய்யாதீர்கள்," என்று எச்சரித்தார்.