சென்னை : அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படம் வரும் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பட வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அருண் விஜய் அளித்த பேட்டியில் ரசிகர்களை கவரும் வகையில் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
படத்தின் தலைப்பு ‘ரெட்ட தல’ என்றதும் ரசிகர்கள் அஜித் குமாரை நினைவுகூர்ந்தனர். “தமிழ்நாட்டில் ‘தல’ என்றால் அஜித் சார்தான். இந்தத் தலைப்பு முதலில் அஜித் சாருக்காக வைக்கப்பட்டதாம். நான் அதைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சி. படம் இந்தத் தலைப்புக்கு முழுமையாக நியாயம் செய்யும்” என்று அருண் விஜய் தெரிவித்தார்.
அஜித் சாரிடம் நேரடியாகப் பேசவில்லை என்றாலும், அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் பேசியதாகவும் கூறினார். விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற நட்சத்திரங்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பது பற்றி தொகுப்பாளர் அவரிடம் கேட்டதற்கு, “கதாபாத்திரம் என்னை உற்சாகப்படுத்த வேண்டும். அதனால்தான் ‘என்னை அறிந்தால்’ நடந்தது.
தனுஷ் பிரதருடன் இயக்குநராகப் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவர் ஒரு கணமும் ஓய்வெடுக்க மாட்டார், உடனே கதாபாத்திரத்தில் முழுமையாக இறங்கிவிடுவார்” என்று பாராட்டினார்.டபுள் ஆக்ஷன் பற்றி கேட்டதற்கு, “’தடம்’ படத்தில் ஒரு அமைதியான கதாபாத்திரம். ஆனால் ‘ரெட்ட தல’யில் கிரே ஷேட்ஸ் (நிழல் பக்கங்கள்) மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
இயக்குநர் அதை அழகாக வடிவமைத்துள்ளார்” என்று அருண் விஜய் தெரிவித்தார்.தன்னை அண்டர்ரேட்டட் ஆக்டர் என்று சமூக வலைதளங்களில் பலர் கூறுவது பற்றி, “அப்படி பல கமெண்ட்ஸ் பார்க்கிறேன். நாம் தொடர்ந்து உழைத்து முன்னேற வேண்டும். அது மட்டுமே முக்கியம்” என்று புன்னகையுடன் பதிலளித்தார். ‘ரெட்ட தல’ படத்தின் மூலம் அருண் விஜய் மீண்டும் கவனம் பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
