வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்...புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை போயஸ் கார்டனிலுள்ள தன் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

Featured image

சென்னை :சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு முன்பு 2026 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்த ரசிகர்களின் உற்சாகத்தை அறிந்த ரஜினிகாந்த் வெளியே வந்து அவர்களைச் சந்தித்தார். கையசைத்து வாழ்த்து பெற்றுக்கொண்ட அவர், ரசிகர்களுக்கு உருக்கமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ரசிகர்கள் முன்பு கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த், 2026 புத்தாண்டு தின வாழ்த்துகளை மனமுருகத் தெரிவித்தார். ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாக கோஷங்களும் இல்லத்தைச் சூழ்ந்தது. இந்தக் காட்சி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஏற்படுத்தியது. ரஜினிகாந்தின் இந்த சந்திப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை மகிழ்வித்தது.

இதனைத் தொடர்ந்து எக்ஸ் வலைத்தளத்தில் ‘முத்து’ படத்தின் பிரபல காட்சியைப் பகிர்ந்த ரஜினிகாந்த், “ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ அந்த ரூட்ல சிவானு சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்” என்று குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆன்மிகக் கருத்துகள் கொண்ட வாழ்த்து பலரது மனதைத் தொட்டது.

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தின் வாழ்த்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ரஜினிகாந்தின் வாழ்த்து அவரது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. 2026 ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் அளிக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.