கடைசியா எனக்கு தூக்கம் வருது சொன்னான்...ரோபோ சங்கரின் அண்ணன் உருக்கம்!

எனக்கு தூக்கம் வருது.. நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன்' னு சொன்னான் என ரோபோ சங்கரின் கடைசி வார்த்தை பற்றி அவருடைய அண்ணண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46), செப்டம்பர் 18, 2025 அன்று சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். செப்டம்பர் 17 அன்று ஒரு டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த அவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்றார். மஞ்சள் காமாலை சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தாலும், குறைந்த இரத்த அழுத்தமும் நீர்ச்சத்து குறைபாடும் அவரை பாதித்தது. இரவு 8:30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

‘விஸ்வாசம்’, ‘மாரி’,’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர். ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அவரது சிரிப்பு தமிழ் மக்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும்,” என்று இரங்கல் தெரிவித்தார். நடிகர்கள் தனுஷ், “ரோபோ சங்கர் அண்ணாவின் சிரிப்பு என்றும் என் நெஞ்சில்,” என்றும், சிவகார்த்திகேயன், “அண்ணாவின் நகைச்சுவை மறக்க முடியாது,” என்றும் பதிவிட்டனர்.

கமல் ஹாசன், சிம்பு, சிம்ரன் ஆகியோரும் #RIPRoboShankar மூலம் தங்கள் துயரத்தை பகிர்ந்தனர். அவரது மறைவு, ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அவரது உடல், சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்கு இன்று, சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த சோகமான சூழலில் ரோபோ சங்கரின் அண்ணன், அவரது இறுதி தருணங்களை உருக்கமாக பகிர்ந்தார். “எப்பவும் ‘தூக்கம் வரலை’னு சொல்லுவான். காலை 8 மணிக்கு ஷூட்டிங் இருந்தா, 4 மணிக்கு எழுந்து டிவி போட்டு உட்காருவான். ஆனா, அன்னிக்கு ‘எனக்கு தூக்கம் வருது, கொஞ்சம் தூங்கப் போறேன்’னு சொன்னான். அது அவன் கடைசியா பேசிய வார்த்தை,” என்று கண்ணீருடன் கூறினார்.