தேசிய விருது ஏதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது? டென்ஷனான நடிகை ஊர்வசி!

விஜயராகவனுக்கும் எனக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை நடிகை ஊர்வசி காட்டத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

urvashi angry

கொச்சி :2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மலையாளப் படமான ‘உள்ளொழுக்கு’ படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், ‘பூக்காலம்’ படத்தில் நடித்த நடிகர் விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விருது தேர்வு முறை மற்றும் பகிர்ந்தளிக்கப்படாத முடிவு குறித்து நடிகை ஊர்வசி கடும் அதிருப்தி தெரிவித்து, தேசிய திரைப்பட விருதுகள் குழுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊர்வசி, தேசிய விருது தேர்வு முறை குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்தார். “எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது? ‘உள்ளொழுக்கு’ படத்தில் எனக்கும், ‘பூக்காலம்’ படத்தில் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகை, நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு ஏன் சிறந்த நடிகர், நடிகை விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை? எங்கள் நடிப்பின் தரம், தாக்கம் ஆகியவற்றை மதிப்பிடும் முறையில் தெளிவு இல்லை. இது நியாயமாகத் தெரியவில்லை,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஊர்வசி மேலும் கூறுகையில், “நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம், வரி செலுத்துகிறோம். அரசு தருவதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சரியல்ல. தேசிய விருது என்பது ஓய்வூதியம் அல்ல. அது ஒரு கலைஞனின் உழைப்பையும், பங்களிப்பையும் அங்கீகரிக்கும் பாராட்டு. ஆனால், இந்தத் தேர்வு முறையில் ஒரு தெளிவான அளவுகோல் இல்லை. ஒரு படத்தில் நாங்கள் எவ்வளவு உணர்வை வெளிப்படுத்தினோம், கதாபாத்திரத்திற்கு எவ்வளவு ஆழம் கொடுத்தோம் என்பதை யார் மதிப்பிடுகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லை,” என்று வேதனை தெரிவித்தார்.

‘உள்ளொழுக்கு’ படத்தில் ஊர்வசியின் நடிப்பு, ஒரு சிக்கலான குடும்பப் பின்னணியில் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தை ஆழமாக வெளிப்படுத்தியதாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. அதேபோல், ‘பூக்காலம்’ படத்தில் விஜயராகவனின் நடிப்பும் முதியவரின் உணர்வுகளை நுணுக்கமாக பிரதிபலித்ததாக புகழப்பட்டது.

அதனை குறிப்பிட்டு பேசிய ஊர்வசி “எங்கள் இருவரின் நடிப்பும், துணை வேடங்களுக்கு அப்பாற்பட்டு, படத்தின் மையமாக இருந்தது. ஆனால், எங்களை துணை நடிகர், நடிகை பிரிவில் மட்டும் தேர்ந்தெடுத்தது ஏன்? இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது? விருது குழு இதற்கு பதில் அளிக்க வேண்டும்,” என்று ஊர்வசி வலியுறுத்தினார்.