வெளியாகுமா ஜனநாயகன்? ’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் ஜன.27-ல் தீர்ப்பு!

ஜனநாயகம் படத்தின் சென்சார் குறித்த வழக்கில் நீதிபதிகள் வரும் ஜன.27-ம் தேதி காலை தீர்ப்பளிக்க உள்ளனர்.

jana nayagan censor issue

சென்னை :நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத் தயாரிப்புக் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தணிக்கை வாரியத் தலைவரின் மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து, உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தலைமை நீதிபதி எம்.எம். வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரணையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கை ஜனவரி 20-க்கு தள்ளிவைத்தது.இடைக்காலத் தடையை எதிர்த்து படத் தயாரிப்புக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து, விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விலேயே விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி ஜனவரி 20-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையின்போது தணிக்கை வாரியத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனும், படத் தயாரிப்புத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜனவரி 27-ம் தேதி காலை தீர்ப்பளிக்க உள்ளனர். இந்த வழக்கின் இறுதி முடிவு ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டு தேதியை நிர்ணயிக்கும் முக்கியக் காரணியாக உள்ளது. படத்தின் ரசிகர்களும், திரையுலகமும் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஜனவரி 27 தீர்ப்பு படத்தின் வெளியீட்டு நிலையை தீர்மானிக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.