சென்னை : இசைஞானி இளையராஜாவின் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர் மாரி செல்வராஜ், தனது நீண்டநாள் கனவு தற்போது நனவாகியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மாரி செல்வராஜ், "இளையராஜா சாரின் 83-வது பிறந்தநாளில் அவருக்கு நேரில் வாழ்த்து சொல்ல வந்திருக்கிறேன். அதைவிட பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், என்னுடைய ஆறாவது படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணங்களில் இதுவும் ஒன்று. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும், கொண்டாடவும் தான் இன்று அவரை சந்தித்தேன்" என்றார்.
மேலும், இளையராஜா மீது தனக்கு இருக்கும் அன்பு மற்றும் மரியாதை குறித்து பேசிய அவர், "எனக்கு சினிமா பற்றி தெரியும் முன்பே, என் வாழ்க்கையில் மிக நெருக்கமாக இருந்தவர் இளையராஜா சார். அவருடைய இசை இல்லாமல் என் வாழ்க்கையையே நினைத்துப் பார்க்க முடியாது. அதனால் அவருடன் ஒருநாள் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவாக இருந்தது. சினிமாவை கொஞ்சம் கற்றுக்கொண்டு, அதற்குத் தகுதியான ஒரு கதையை உருவாக்கி, அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று எப்போதும் நினைத்தேன். இன்று அது நடந்திருக்கிறது" என்று கூறினார்.
'மஞ்சணத்தி' குறித்து பேசிய மாரி செல்வராஜ், "இந்தப் படத்தின் கதையை எழுதும்போதே என் மனதில் இளையராஜா சார் இருந்தார். இசையையும், அவருடைய உணர்வுகளையும் மனதில் வைத்துக்கொண்டே இந்தக் கதையை உருவாக்கினேன். அதனால் தான் இந்தப் படத்திற்கு அவர் இசையமைப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.
இளையராஜாவின் புகைப்படத்திற்கு அடிக்கடி முத்தம் கொடுப்பது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இளையராஜா மீது எனக்கு தீராத காதல் இருக்கிறது. அவருடைய இசை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் அவரை பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுக்கிறேன். அது ஒரு ரசிகனின் உணர்வு மட்டுமல்ல, வாழ்க்கையை மாற்றிய ஒரு கலைஞருக்கான நன்றியும் கூட" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
