"கண்டிப்பா 'ரோலக்ஸ்' இருக்கு!" ரெட்ரோ நிகழ்வில் லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

சூர்யா உடன் இணைந்து ரோலக்ஸ் எனும் திரைப்படம் தான் இயக்குவேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Rolex Suriya - Dir Lokesh Kanagaraj

சென்னை: சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்பட ரிலீசை முன்னிட்டு சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ், 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார்கள். இது நல்ல விஷயம். இதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்று தான் நான் இங்கு வந்துள்ளேன். ரெட்ரோ படத்திற்கு நான் இரவு காட்சிக்கு டிக்கெட் எடுத்து வைத்துள்ளேன். படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

என்னுடன் பணியாற்றும் நபர்கள் ரெட்ரோவிலும் பணியாற்றி உள்ளனர். இதனால் படம் பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வேன். தற்போது கூலி படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. என தெரிவித்தார்.

அப்போது சூர்யாவுடன் எப்போது இணைந்து பணியாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த லோகேஷ், “நிச்சயமாக. அதான் ரோலக்ஸ் இருக்குல்ல. கண்டிப்பா நாங்க படம் பண்ணுவோம்.” என தெரிவித்தார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் இறுதி காட்சியில் ரோலக்ஸ் எனும் அசுரத்தனமான வில்லன் வேடத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறவே, அந்த கதாபாத்திரத்தை வைத்து ரோலக்ஸ் எனும் பெயரில் தனி படமாக எடுக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.