சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் தடைகளை கடந்து இன்று (ஜனவரி 10) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. 25க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் U/A சான்றிதழ் கிடைத்த பிறகு, பொங்கல் பண்டிகை ரிலீஸ் போட்டியில் இப்படம் தனியாக நிற்கிறது. தணிக்கை வாரியத்தின் கடுமையான திருத்தங்கள் இருந்தபோதிலும், படக்குழு அவற்றை ஏற்று ரிலீஸ் செய்துள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், திரையரங்குகளில் படம் தொடங்கியுள்ளது.ஆனால், டிக்கெட் முன்பதிவு மற்றும் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் சில முக்கிய திரையரங்குகளில் நல்ல அளவில் டிக்கெட் புக் ஆகியுள்ளது. கோவை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சில திரையரங்குகளில் மட்டுமே கணிசமான முன்பதிவு உள்ளது. மற்ற திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மெதுவாக உள்ளது.
தூத்துக்குடி, திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர், ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் டிக்கெட் பெரிய அளவில் புக் ஆகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்தின் வசூல் மீது கேள்வியை எழுப்பியுள்ளது. பொங்கல் சீசனில் பல குடும்பங்கள் திரையரங்குகளை நோக்கி செல்லும் நிலையில், முன்பதிவு குறைவு கவனிக்கத்தக்கது.
தணிக்கை திருத்தங்கள், அரசியல் சர்ச்சைகள் மற்றும் போட்டி இல்லாத ரிலீஸ் ஆகியவை ரசிகர்களிடையே ஆர்வத்தை குறைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் படம் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தாலும், ஒட்டுமொத்த டிக்கெட் விற்பனை திணறல் நிலையில் உள்ளது. முதல் நாள் வசூல் எப்படி அமையும் என்பது இன்றைய திரையரங்கு நிலவரத்தைப் பொறுத்தே தீர்மானமாகும்.
பொங்கல் பண்டிகை ரிலீஸ் போட்டியில் ‘ஜனநாயகன்’ தாமதமான நிலையில் ‘பராசக்தி’ தனியாக வெளியாகியுள்ளது. இருப்பினும், டிக்கெட் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது படக்குழுவுக்கு சவாலாக உள்ளது.
