நெருங்கும் பொங்கல்...களைகட்டியதா பராசக்தி வசூல்?

பராசக்தி படத்தின் இரண்டாவது நாள் வசூல் படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

parasakthi box office

சென்னை :சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது அவரது 100-வது படமாகும். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 140 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்த இப்படத்தின் ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் கையாண்டார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.10.16 கோடியும், உலகம் முழுவதும் ரூ.27 கோடியும் வசூலித்தது. ஆனால், இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமையில் வசூல் பெரும் சரிவை சந்தித்தது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.8.27 கோடி மட்டுமே வசூலானது. ஞாயிற்றுக்கிழமை என்பது பொதுவாக திரையரங்குகளில் அதிக வசூல் எதிர்பார்க்கப்படும் நாள் என்பதால், இந்த சரிவு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

போகிற போக்கைப் பார்க்கும்போது, ‘பராசக்தி’ படம் 100 கோடி வசூல் எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.35 கோடிக்கு மேல் வசூலித்தாலும், முதல் நாள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தொடர்ச்சி இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமைக்கான முன்பதிவும் மிகவும் மந்தமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தணிக்கை திருத்தங்கள், அரசியல் உள்ளடக்கத்தின் மாற்றங்கள், கலவையான விமர்சனங்கள் ஆகியவை படத்தின் வசூலை பாதித்துள்ளன என்று திரையரங்கு வட்டாரங்கள் கூறுகின்றன. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு ஆதரவு இருந்தாலும், ஒட்டுமொத்த பார்வையாளர்களின் வருகை குறைவாக உள்ளது. படத்தின் மீதமுள்ள நாட்களில் வாய்மொழி பரவல் மூலம் வசூல் மேம்படும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர்.