முடிவுக்கு வருமா ஜனநாயகன் பட பிரச்னை? நாளை படம் பார்க்கும் சென்சார் குழு!

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வு குழு நாளை (மார்ச்17) பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

jana nayagan censor issue

சென்னை :தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்று விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்ந்து வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரான பிரம்மாண்ட படைப்பு.முதலில் 2026 ஜனவரி 9 அன்று வெளியாக திட்டமிடப்பட்ட இப்படம், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) ஆய்வுக் குழு சில காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு பரிந்துரை செய்யாததால் தாமதமானது.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இரு நீதிமன்றங்களும் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு அளிக்கவில்லை.சமீபத்தில் அமேசான் ப்ரைம் உடன் மேற்கொள்ளப்பட்ட OTT ஒப்பந்தமும் இந்த தாமதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் படக்குழுவினரும் ரசிகர்களும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

படத்தின் அரசியல் உள்ளடக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகள் குறித்து தணிக்கை வாரியத்துக்கும் படக்குழுவுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.இந்நிலையில், படம் மறுஆய்வுக் குழுவின் (Revising Committee) பார்வைக்கு அனுப்பப்பட்டது. கடந்த மார்ச் 9-ஆம் தேதி மறுஆய்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குழு உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்றைய ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, நாளை (மார்ச் 17) மறுஆய்வுக் குழு அதிகாரப்பூர்வமாக ‘ஜனநாயகன்’ படத்தை ஆய்வு செய்ய உள்ளது. படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஆய்வு நடக்காவிட்டால், மார்ச் 19 அன்று மறு ஆய்வு நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.