“200 பிரமுகர்கள், மரியாதை அணிவகுப்பு”… மொரிஷியஸில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு.!
மொரீஷியஸ் நாட்டில் நாளை நடைபெறும் "தேசிய தினக் கொண்டாட்டத்தில்" சிறப்பு விருந்தினராகக் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, நாளை (மார்ச் 12 ஆம் தேதி) நடைபெறும் மொரீஷியஸின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்தியப் பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை மொரீஷியஸ் சென்றடைந்த இந்திய பிரதமர் மோடியை, போர்ட் லூயிஸில் உள்ள விமான நிலையத்தில் வைத்து மாலை அணிவித்து வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் நவின் ராம்கூலம். பிரதமர் மோடியை வரவேற்க துணைப் பிரதமர், மொரீஷியஸ் தலைமை நீதிபதி, தேசிய சட்டமன்றத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவு அமைச்சர், அமைச்சரவைச் செயலாளர், கிராண்ட் போர்ட் மாவட்ட கவுன்சிலின் தலைவர் உட்பட மொத்தம் 200 பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
இது அவரது வருகையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலமின் அழைப்பின் பேரில், அங்கு சென்றுள்ள மோடியின் இந்த பயணத்தின் போது, வர்த்தகம் மற்றும் எல்லை தாண்டிய நிதிக் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டங்கள் துவக்கி வைப்பு
இந்தியா நிதியளிக்கும் 20க்கும் மேற்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்றும், தென்கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும், மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலத்துடன் இணைந்து சிவில் சர்வீசஸ் கல்லூரி கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த கட்டிடத்தின் கட்டுமானம் சுமார், 4.75 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், சுமார் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பகுதி சுகாதார மையம் மற்றும் 20 சமூக திட்டங்களையும் மோடி இணையம் வழியாகத் திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.