போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு இந்தியா தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும் தகவல்கள் பரவியது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்படி கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி ஏற்கனவே விளக்கம் அளித்து பேசியிருந்தார். இருந்தாலும் மீண்டும், ட்ரம்ப் தொடர்ச்சியாகவே, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலை தான் தடுத்து நிறுத்தியதாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கு பங்கு இல்லை என திட்டவட்டமாக கூறி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை. இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்டது. ட்ரம்ப் எங்களின் அனுமதி இல்லாமல் மைய அரங்கில் இடம்பெற விரும்பினார்.
மே 10, 2025 அன்று பாகிஸ்தானின் DGMO, இந்திய DGMO-வை தொடர்பு கொண்டு மாலை 5 மணி முதல் எல்லா இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புக்கொண்டார். ஆனால், ஸ்ரீநகர், ஜம்முவில் பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியது. எனவே, இந்தியா பொருத்தமான பதிலடி கொடுத்தது. மோதல் வழக்கமான ஆயுதங்களுடன் மட்டுமே நடந்தது. பாகிஸ்தான் சீன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கு இந்தியா துல்லியமாக பதிலடி கொடுத்தது” எனவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.