நெருங்கும் டெல்லி தேர்தல்., 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ‘திடீர்’ ராஜினாமா!
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போது 3வது முறையாக நிலையான ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மியும், எதிர்கட்சியாக உள்ள பாஜக, மீண்டும் டெல்லியில் தனது இருப்பை காட்ட முயற்சிக்கும் முனைப்பில் காங்கிரஸ் என மும்முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
இப்படியாக தேர்தல் களம் பரபரக்க, அதனை மேலும் பரபரப்பாக்கும் வண்ணம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 4 பேர் திடீரென ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். த்ரியோக்பூரி தொகுதி எம்எல்ஏ ரோஹித், கஸ்தூர்பா நகர் தொகுதி எம்எல்ஏ மதன் லால், ஜனக்புரி தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி, பாலம் தொகுதி எம்எல்ஏ பாவ்னா கவுர் ஆகிய 4 பேருக்கும் இந்த முறை கட்சித் தலைமை தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கவில்லை.
மேற்க்கண்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி சார்பில் வேறு நபர்கள் களம் காணுகின்றனர். இப்படியான சூழலில், மேற்க்கண்ட 4 பேரும் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தங்களுக்கு கட்சிதலைமை தேர்தல் நிற்க வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.